மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புகள் வர ஆரம்பித்துள்ள நிலையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிர்ச்சியடைந்த சுகாதரத்துறை அங்குள்ள மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்தது.
அதில் பலருக்கு கரோனா உறுதியான நிலையில் தமிழகம் முழுவதும் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அதனால், தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தள்ளார்.
அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம், கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘திருச்சியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் இருந்த மற்ற மாணவர்களைப் பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு கரோனா இல்லை. அதனால், அச்சப்படத் தேவையில்லை,’’ என்றார்.