எல்.முருகன்: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்; யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தேசியத் தலைமைதான் முடிவு செய்யும்: எல்.முருகன் பேட்டி

பெ.பாரதி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று (டிச.19) கலந்துகொண்டு வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த முருகன், "வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வணிகர்களாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம், இரட்டிப்பு மகசூல் உள்ளிட்டவை, இந்தப் புதிய சட்டங்களால் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.

இதனால் பாஜகவுக்கு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற நல்ல பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே திராவிடக் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது.

வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும். ஆனால், யார் தலைமையில் தேர்தலைச் சந்திப்பது, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். எனது தலைமையிலான வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியைப் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது" என்றார்.

SCROLL FOR NEXT