அருமைகண்ணு 
தமிழகம்

காரைக்கால் அருகே முன்னாள் எம்எல்ஏ மனைவியின் சடலம் ஆற்றில் கரையொதுங்கியது

வீ.தமிழன்பன்

காரைக்கால் அருகே முன்னாள் எம்எல்ஏ மனைவியின் சடலம் ஆற்றில் கரையொதுங்கியது.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் காந்தி சாலையைச் சேர்ந்தவர் வி.எம்.சி.வி. கணபதி. இவர் முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக புதுச்சேரி முன்னாள் மாநிலச் செயலாளரும் ஆவார். இவரது மனைவி அருமைகண்ணு (எ) அனிதா (61). தம்பதியர் இருவரும் திருமலைராயன்பட்டினத்தில் வசித்து வந்தனர்.

இருவருக்குமிடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகவும், அருமைகண்ணு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (டிச.18) பிற்பகலிலிருந்து அருமைகண்ணு காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, திருமலைராயன்பட்டினம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருமலைராஜன் ஆற்றுக் கரையோரத்தில் அவர் அணிந்திருந்த காலணிகள் கிடந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர், மீனவர்கள் உதவியோடு இரவு தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இன்று (டிச.19) காலை திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை அருகே ஆற்றின் கரையோரத்தில் முட்புதரில் அருமைகண்ணுவின் உடல் சிக்கி கரையொதுங்கியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT