தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பில் அவசர ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளாக 392 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் காவலர்கள் குடும்பத்தை சேர்ந்த சுமார் 2,000 பேர் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் வெகு தொலைவில் இருந்துதான் ஆம்புலன்ஸ் வாகனம் வரவேண்டிய நிலை இருந்தது.
காவலர் குடியிருப்பு பகுதியில் ஆம்புலன்ஸ் வாகன வசதியை ஏற்படுத்த வேண்டும் என காவலர்கள் குடும்பத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து, சம்மந்தப்பட்ட ஆம்புலன்ஸ் நிர்வாக மேலாளர் மூலமாக முதலுதவி சிகிச்சை உபகரணங்கள், மருத்துவ அலுவலர்கள் அடங்கிய புதிய ஆம்புலன்ஸ் வாகனம் ஆயுதப்படை குடியிருப்பில் 24 மணி நேரமும் தயார் நிலையில் நிற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் மூலம் காவலர் குடியிருப்புகள் மட்டுமல்லாது, இப்பகுதி பொதுமக்களும் பயன்பெறுவர். இந்த புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ஆயுதப்படை குடியிருப்பில் கழிவு நீர் தேங்குவதாகவும், அவற்றை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் காவலர்கள் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தை தொடர்ந்து, ஆயுதப்படை குடியிருப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எஸ்பி நடவடிக்கை எடுத்தார்.
இதன் மூலம் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, அவற்றை செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது உட்பட வீட்டு உபயோக்கத்துக்கு பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் எஸ்பி ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார். பின்னர் காவலர் குடியிருப்புகளை எஸ்பி ஆய்வு செய்தார்.
காவலர்கள் தங்கள் வீடுகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் பொருட்டு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வீடுகளை சுத்தமாகவும், சிறந்த முறையிலும் பராமரித்து வந்த முதல் நிலைக்காவலர் ரமேஷ் குமாருக்கு முதல் பரிசும், காவலர் மயிலேரிக்கு 2வது பரிசும், தலைமைக்காவலர் தஸ்நேவிஸ் என்பவருக்கு 3-வது பரிசும் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து காவலர் குடியிருப்பில் உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, செல்வன், ஆயுதப்படை டிஎஸ்பி கண்ணபிரான், ஆய்வாளர் ஜாகீர் உசேன், ஆம்புலனஸ் மேலாளர் ரஞ்சித்குமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.