தமிழகத்தில் நீரினை பயன்படுத்து வோர் சங்கங்களின் பதவிக்காலம் முடிவடைந்து ஓராண்டாகியும் தேர்தல் நடத்த பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளிடையே நீரை பகிர்ந்து அளிக்கவும், விவசாய மேம்பாட்டுக்காகவும் தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம்- 2000 என்ற சட்டத்தை தமிழக அரசு கடந்த 5.3.2001-ல் கொண்டு வந்தது. இந்த சட்டம் 1.10.2002-ல் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பால் அமலுக்கு வந்தது.
மூன்றடுக்கு அமைப்புகள்
இச்சட்டத்தின் மூலம் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள், பகிர்மான குழுக்கள், திட்டக்குழு ஆகிய மூன்றடுக்கு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் தாமிரபரணி உள்ளிட்ட 9 வடிநில அமைப்புகளுக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்கங் கள், பகிர்மானக் குழுக்கள், திட்டக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 63 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 50 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பகிர்மானக் குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 3 பகிர்மானக் குழுக்களும் அமைக்கப்பட்டன.
மேலும், இரு மாவட்டங்களு க்கும் சேர்த்து தாமிரபரணி வடிநில கோட்டத்துக்கு என ஒரு திட்டக்குழுவும் அமைக்கப்பட்டது.
பதவி காலம் முடிந்தது
இந்த மூன்றடுக்கு அமைப்பு களுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பொறுப்பாளராகவும், பொதுப்பணித்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி ஆலோசகராகவும் இருந்து வருகின்றனர்.
இந்த அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2014 -ம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்துவிட்டது. ஆனால், இதுவரை தேர்தலுக்கான எந்த பணிகளையும் பொதுப்பணித் துறையினர் தொடங்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல்
தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் சி.நயினார் குலசேகரன் கூறும்போது, ‘வாக்காளர் பட்டியலை பொதுப்பணித்துறை வெளியிட்டு தேர்தலை நடத்த வேண்டும். இதுதொடர்பாக பொதுப்பணித்துறையிடம் கேட்டால் முரண்பட்ட தகவலை தெரிவிக்கின்றனர். தேர்தலை காலம் கடத்தி வருகின்றனர்.
இதனால், விவசாய பாசனத் தில் மூன்றடுக்கு நீரினை பயன் படுத்துவோர் அமைப்புகள் நிறைவேற்ற வேண்டிய வேலைகள் பாதிக்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தலை நடத்த வேண்டும்’ என்றார் அவர்.பொதுப்பணித்துறை அதிகாரி களிடம் கேட்டபோது, ‘உரிய திருத்தம் செய்வதற்காக வாக் காளர் பட்டியல் கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கப் பட்டுள்ளது. இந்த திருத்தம் பணி முடிந்து, அரசு உரிய ஆணை வழங்கியதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றனர்.