தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்களின் கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் அரங்கில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. யாதவ மகாசபை தலைவர் தி.தேவநாதன் யாதவ் தலைமை வகித்தார்.
பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் னிவாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மீனவர் பேரவை தலைவர் அன்பழகன், தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜிஉட்பட பல்வேறு சமூக தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப் பதற்கான அணுகுமுறைகள் ஆகியவை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும், பிற்படுத்தப்பட்டோ ருக்கான கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும், சிறுபான்மை கல்வி நிறுவனம், மொழிவாரி சிறுபான்மை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து யாதவ மகாசபை தலைவர் தி.தேவநாதன் யாதவ் கூறியதாவது:
வெவ்வேறு நோக்கம் கொண்ட நாங்கள் அனைவரும் தற்போதுசமூகரீதியாகவும், இடஒதுக்கீட்டுக்காகவும் ஒன்றிணைந் துள்ளோம்.
சிறுபான்மையினர் இடஒதுக்கீடு கேட்டு போராடியபோது, பிற்படுத் தப்பட்ட வகுப்பின் 3 சதவீத இடஒதுக்கீடு பறிபோனது. 1989-ல்இடஒதுக்கீடு கேட்டு ஒரு சமூகம்போராடியபோது நமது இடஒதுக்கீடு 20 சதவீதம் பறிபோனது. இப்போதும் நாம் அமைதியாக இருந்தால், இருக்கும் இடஒதுக்கீடுகூட பறிபோய்விடும் அபாயம் உள்ளது. அதை தடுப்பதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கும் 26.5 சதவீத இடஒதுக்கீட்டில் தமிழக அரசு கை வைத்தால், பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும்தெருவில் இறங்கி போராட வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை நிறை வேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.