காவிரி பாசன மாவட்டங்களில் 21% வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசின் அலட்சியமான அணுகுமுறை காரணமாக, அரும்பாடுபட்டு சேர்த்த அனைத்து செல்வங்களும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள்.
நெல் கொள்முதல் விலை அறிவிக்கப்பட்ட பிறகும், அதை கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாட்டு அரசு முறையாக செய்யவில்லை என்பது தான் இதற்குக் காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் நாள் நெல் கொள்முதல் விலை அறிவிக்கப்படுவதும், அடுத்த நாள் முதல் குறுவைப் பருவ நெல் கொள்முதல் தொடங்குவதும் வழக்கம் ஆகும்.
நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலையை கடந்த 30 ஆம் தேதி அரசு அறிவித்தது. ஆனால், அதன்பின் ஒருவாரம் ஆகியும் காவிரி பாசன மாவட்டங்களில் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை; சில இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றில் நேரடி நெல் கொள்முதல் இன்னும் முறைப்படி தொடங்கவில்லை.
குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தங்களின் விளைபொருளை விற்பதற்காக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்றால் பல்வேறு காரணங்களைக் கூறி திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
நெல் கொள்முதல் செய்வதற்குத் தேவையான சாக்குகள் இருப்பில் இல்லை, கொள்முதல் செய்யப் பட்ட நெல்லுக்கு வழங்குவதற்கான பணம் இல்லை என்று காரணங்கள் கூறப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாற்றியுள்ளனர்.
இக்குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் ஒப்புக்கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களிலும் இந்த பிரச்சினை இருப்பதை மாவட்ட நிர்வாகம் மறுக்கவில்லை.
நெல் கொள்முதல் செய்யப்படுவதில் காட்டப்படும் அலட்சியம் காரணமாக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் கடந்த திங்கட்கிழமை பெய்த மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிவிட்டன. முளை விட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாது என்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில், குறுவை நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் கூறி அவற்றை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகக் கூறப்படுகிறது. 18 விழுக்காட்டிற்கும் குறைவான ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறிவிட்டதால் பெரும்பாலான விவசாயிகள் தங்களின் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இன்னும் பல விவசாயிகள் வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் நெல் மூட்டைகளை விற்கும் கொடுமையும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
பொதுவாக குறுவை நெல் விதைப்பதில் தொடங்கி அறுவடை செய்வது வரை அனைத்துப்பணிகளும் தண்ணீர் நிரம்பிய வயல்களில் தான் செய்யப்படும் என்பதால் குறுவை நெல் ஈரப்பதத்துடன் இருப்பது தவிர்க்க முடியாதது ஆகும்.
இதைக் கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு ஆண்டும் 21% வரை ஈரப்பதம் உள்ள நெல் வகைகளை கொள்முதல் செய்யும்படி அரசு ஆணை பிறப்பிக்கும். ஆனால், இந்த ஆண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால், கிடைத்த நீர் ஆதாரங்களைக் கொண்டு ஏழை விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர்.
அவர்கள் உற்பத்தி செய்த நெல் முளைவிட்டு வீணாமல் போனாலோ, தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலோ உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுவிடும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்த தமிழக அரசு, அவற்றில் நெல் கொள்முதலை தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நிலைமையையும், குறுவை நெல் ஈரப்பதத்துடன் இருப்பது தவிர்க்க முடியாது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
நேரடி கொள்முதல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை தீவிரப் படுத்துவதுடன், 21% வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும்.