தமிழகம்

ஈமு கோழி மோசடி விவகாரம்: பெண் காவலர் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை ரூ.2.16 கோடி அபராதம்

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஜோதி நகரைச் சேர்ந்த ஏ.கார்த்திக் சங்கர்(44), அவரது மனைவி காயத்ரி ஆகியோர் ஈமு கோழி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இதில் மேலாளராக சபின்கண்ணா(25) பணியாற்றி வந்தார்.

கோபி காவல் கோட்டத்தில் காயத்ரி காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர்களது ஈமுகோழி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக அளவு ஊக்கத்தொகை, போனஸ் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி ஏராளமானோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். எனினும், குறிப்பிட்டபடி முதலீட்டாளர் களுக்கு ஊக்கத்தொகை தரவில்லை. மொத்தம் 73 முதலீட்டாளர்களிடம் ரூ.3.42 கோடி மோசடி செய்துவிட்டு, மூவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட சின்னபுலியூர் வெங்கடேசன், ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் 2012-ம் ஆண்டு புகார் செய்தார். கார்த்திக் சங்கர், காயத்ரி, சபின் கண்ணா ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு, பொருளா தாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் மொத்தம் ரூ.2.16 கோடி அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT