குப்பையை வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை மாநகராட்சி முழுவதும் முழு சுகாதார தமிழக திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முழு சுகாதார திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் பேசியதாவது:
அன்றாடம் வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை வீடுகளிலேயே பிரித்து வாங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் குப்பைகளில் மக்கும் குப்பையை (உணவுக் கழிவுகள்) பயன்படுத்தி மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் உரம் தயாரிக்கலாம்.
மக்காத குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்களை சாலைகள் அமைக்க பயன்படுத்த லாம். பிளாஸ்டிக், கண்ணாடி, இரும்பு பொருட்கள், காகிதம் போன்றவற்றை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு குப்பைகளை தரம் பிரிப்பதன் மூலம், சென்னை மாநகராட்சியில் அன்றாடம் உருவாகும் குப்பைகளில் குறைந்த அளவே குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்.
இந்த முழு சுகாதார தமிழக திட்டம் தொடர்ந்து முழுமையாக செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றார்.