தமிழகம்

கூட்டணியை நம்பி அதிமுக இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கூட்டணியை நம்பி அதிமுக இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் பரவை கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:

திமுக ஆட்சிக் காலத்தில் பெட்ரோல் விலை உயர்வானபோது முக.ஸ்டாலின் எங்கே இருந்தார். திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர நினைக்கிறது. அதிமுகவை அடிமை அரசு எனக்கூற மு.க. ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர்கள்தான் காங்கிரஸ் ஆட்சியில் அடிமையாக இருந்தனர்.

காங்கிரஸ் மத்தியில் அங்கம் வகித்த போது கனிமொழி, அ. ராசா ஆகியோர் கைது செய்யபட்டனர்.

புதிதாக கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு நிதிநிலை, நிர்வாகம், சட்ட நுணுக்கங்கள் எப்படி என்பது தெரியாது. அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது. அமைச்சர்கள் மலர் படுக்கையில் அமரவில்லை.

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. எந்த அமைச்சர்களும் முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை. எங்களுக்கு அதற்கான நேரமும் இல்லை. கமல் எதைச் சொல்லியும் அதிமுக தொண்டர்களைப் பிரிக்க முடியாது.

கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. மக்களை நம்பியே உள்ளது. அதிமுகவிற்கு கூட்டணி என்பது பெரிதல்ல மக்கள்தான் எஜமானார்கள். மக்கள் எங்களை நம்புகிறார்கள் மக்களை நாங்கள் நம்புகிறோம்

கூட்டணி என்பது வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே. கூட்டணியில் இவர்கள் இருந்தால்தான் வெற்றி என்ற நிலைப்பாடு அதிமுகவிற்கு கிடையாது. அதிமுக அரசின் திட்டங்களை முன்னிறுத்தி மக்களை சந்திப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT