தமிழகம்

மின்வாரிய உதவியாளர், வயர்மேன் பணியிடங்கள்; தனியார் மயமாக்காமல் அரசே நிரப்பவேண்டும்: ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மின்வாரிய உதவியாளர், வயர்மேன் பணியிடங்களை தமிழக அரசே நேரடியாக நியமிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 52000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் பல லட்சம் இளைஞர்கள் படித்து முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

ஆனால் தமிழக அரசு, அரசு மற்றும் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப மறுத்து வருகிறது. தமிழக அரசு உருவாக்கிய 10000 கேங் மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கான பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில், தமிழக மின்வாரியத்தில் பராமரிப்புப் பணிகளுக்கு போதுமான நபர்கள் இல்லையென்றும் எனவே, அதற்கான பணியாளர்களை தனியார் நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் அடிப்படையில் நியமிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரின் உத்தரவின்பேரில், தலைமைப் பொறியாளர் (பணியாளர்) ரவிச்சந்திரன் அனைத்து தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், மேற்பார்வைப் பொறியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவு அலுவலகங்களில் காலியாக உள்ள ஹெல்பர், வயர்மேன் பணியிடங்களில், 20 நபர்களை மூன்று ஆண்டுகள் தனியார் நிறுவனத்தின் மூலம் பணியில் அமர்த்தலாம். இவர்களுக்கு ஒரு கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அளிக்கப்படும். ஒரு பணியாளருக்கு தினமும் 412 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். 30 நாள்கள் கொண்ட மாதத்திற்கு 12,360 ரூபாய் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாடு மின்வாரியத்திலுள்ள களப்பணியாளர்கள் பணியிடங்கள் பெரும்பகுதி காலியாக உள்ள நிலையில் அப்பணியிடங்களில் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அவுட்சோர்சிங் அடிப்படையில் தான் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக இளைஞர்களின் உழைப்பை கொடூரமாகச் சுரண்டும்

இத்தகைய பணியமர்த்தலை கைவிட்டு தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக நிரந்தர அடிப்படையில் போதுமான ஊழியர்களை பணியமரத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், உதவியாளர் மற்றும் வயர்மேன் பணியிடங்களையும் தனியார் நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் அடிப்படையில் நியமிக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

இதனால் ஐடிஐ படித்து முடித்த இளைஞர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். ஏற்கனவே மின் உற்பத்தியை அரசு செய்யாமல் ஒப்பந்தம் முலம் தனியரிடம் ஒப்படைத்ததன் மூலம் பல்லாயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுத்த உதய் திட்டத்தை எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டதால் தமிழக மின்சாரவாரியம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், வந்துள்ள தனியார் ஒப்பந்தப் பணிகள் மற்றும் பணி நியமனம் மூலம் தமிழக மின்வாரியத்தை சீர்குலைக்கும் செயலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, மின்வாரிய தலைமைப் பொறியாளரின் கடிதத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும், மின்வாரிய உதவியாளர், வயர்மேன் பணியிடங்களை தமிழக அரசே நேரடியாக நியமிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT