தமிழகம்

வீட்டில் அமர்ந்து அரசை விமர்சிப்பது பெரிதா? மக்களை நேரடியாகச் சந்திப்பது பெரிதா?- ஸ்டாலினிடம் முதல்வர் கேள்வி

வி.சீனிவாசன்

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வீட்டில் அமர்ந்து கொண்டு, வீடியோகான்ஃபிரன்சிங்கில் அதிமுக அரசை விமர்சிப்பது பெரிதா? நேரடியாக நாங்கள் மக்களைச் சந்தித்து வருவது பெரிதா?’ என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் பனமரத்துப்பட்டி அருகே ஏர்வாடி வாணியம்பாடியில் முதல்வர் பழனிசாமி மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். விழாவில் ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். மினி கிளினிக்கைத் தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் மூலம் உருவாக்கப்பட்ட அதிமுக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு, இரு பெரும் தலைவர்கள் வழியில் மக்களுக்குப் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ஜெயலலிதா இருக்கும் வரை மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்தார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. தமிழக மக்கள்தான் அவர்களுக்கு வாரிசு.

பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கியவர் ஜெயலலிதா. அதேபோல, எம்ஜிஆர் பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். இவ்விரு தலைவர்களின் திட்டங்கள் உயிரோட்டமிக்கவை. அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை அடுத்து வரும் முதல்வர்களால் நிறுத்த முடியாது.அந்த வகையில் தற்போது, ஏழை, எளிய மக்களுக்குத் தரமான, உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை பகுதி மக்கள் பயன்படும் வகையில் காவிரி குடிநீர்த் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 4,63,500 மக்கள் பயன் அடைவர். அடிக்கடி விபத்து நடந்துவரும், அரியானூர் பிரிவு சாலையில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் விரைவில் கட்டப்படும். நகர்ப்புற, கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் சாலைப் பணிகள், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே ஆளும்கட்சி மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அவர் வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு, வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் கட்சியினரிடம், அதிமுக அரசை விமர்சித்து வருகிறார். நாங்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

எதிர்க்கட்சி தலைவர் வீட்டில் அமர்ந்து கொண்டு, அதிமுக அரசை விமர்சிப்பது பெரிதா? நேரடியாக நாங்கள் மக்களைச் சந்தித்து வருவது பெரிதா? நான் மட்டுமல்லாமல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து, மக்களுக்காக உழைத்து வருகின்றனர். மக்களின் நன்மைக்காக ஒவ்வொரு துறையிலும் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அவை கிடைக்க வேணடும் என்பதற்காக அதிமுகவினர் பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், திமுகவினர் சுயநலவாதிகள், தங்கள் குடும்பம்தான் வாழ வேண்டும் என என்னும் ஒரே கட்சி திமுகதான். அந்தக் கட்சியில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை அப்படித்தான் உள்ளனர். அதிமுகவில் உழைப்பவர்கள் உயர்ந்த இடத்துக்கு வர முடியும். விசுவாசிகள் உயர்ந்த பதவிக்கு வர முடியும். அதனால்தான் இந்த இயக்கத்தை உடைக்க முயற்சித்தார்கள். இந்த அரசைக் கலைக்க முயற்சித்தார்கள். இவை இரண்டும் மக்களின் துணை கொண்டு முறியடிக்கப்பட்டது. ஆகவே, அதிமுக அரசு என்றைக்கும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கிராமப்புற மக்களுடைய வாழ்வு உயர எங்களுடைய அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், தமிழ்நாடு அரசு மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், எம்எல்ஏக்கள் மனோன்மணி, சித்ரா உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT