பிரெஞ்சுக் காலத்தில் கட்டப்பட்ட செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணை சீரமைக்கப்படாததால் மேலும் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.
புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, படுகை அணை பிரெஞ்சு ஆட்சியில் 1906-ம் ஆண்டு கட்டப்பட்டது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், செல்லிப்பட்டு, பிள்ளையாகுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் இந்தப் படுகை அணை கட்டப்பட்டது.
இதனிடையே உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016-ம் ஆண்டு பெய்த கனமழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்த்தளம் முற்றிலும் சேதமடைந்தது. அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் படுகை அணைச் சேதம் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது. எனினும், படுகை அணையை நிரந்தரமாகச் சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அவ்வப்போது மழைக் காலங்களில் பொதுப்பணித் துறை மூலம் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி, உடைப்பு சரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாகவும், வீடூர் அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணை நீரில் மூழ்கியபடி தண்ணீர் ஓடுகிறது. படுகை அணையில் நிரம்பி வழியும் தண்ணீரைப் பார்வையிடப் பொதுமக்கள் குவிந்ததால் இந்த அணைப் பகுதி திடீர் சுற்றுலாத் தலமாகவும் மாறியது. இந்நிலையில் தொடர் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாகப் படுகை அணையில் மேலும் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல ஆயிரம் கன அடி நீர் வெளியேறிக் கடலில் கலப்பதால், படுகை அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர். விரைந்து படுகை அணையைச் சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாகப் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மகாலிங்கத்திடம் கேட்டபோது, ''கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லிப்பட்டு படுகை அணையின் ஒரு பகுதி சேதமடைந்தது. நாங்கள் மழைக்கு முன்பே தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்தோம். தற்போது கனமழையாலும், வீடூர் அணை உபரிநீர் திறப்பால் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சேதம் அதிகமாகியுள்ளது.
மழை முடிந்த பின்னர் அதனைச் சரிசெய்வோம். மேலும் இந்த அணையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சுமார் ரூ.15 கோடி மதிப்பில் புதிய படுகை அணை கட்ட உள்ளோம். அணை கட்டுவதற்கான முழுமையான ஆய்வு, மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணி தொடங்கப்படும். பணி தொடங்கிவிட்டால் ஓராரண்டில் கட்டி முடிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.