மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் 
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.3.86 கோடி அபராதம் விதிப்பு: எஸ்பி விஜயகுமார் தகவல்

ந. சரவணன்

புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக 2.94 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு ரூ.3.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த 2019-ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் 16-ம் தேதி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை வதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு ரூ.3.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று (டிச. 18) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் இம்மாதம் 16-ம் தேதி வரை கிட்டத்தட்ட 12 மாதங்களில் சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் மீது மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகை 3 கோடியே 86 லட்சத்து 855 ரூபாய் ஆகும்.

இந்த அபராத தொகைகளை கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமாகவும், கார்டுகள் இல்லாதவர்கள் இ-சலான் (E-Challan) ரசீதில் உள்ள எண் அல்லது வாகன பதிவு எண், வாகன இன்ஜின் எண்ணை கொண்டு இணைய வழியில் எஸ்பிஐ வங்கியிலும், நெட்பேங்கிங் மூலமாக அபராத தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இனி சாலை விதிகளை மீறுபவர்கள் அனைவருக்கும் விதிக்கப்படும் அபராத தொகையானது, 'பணமில்லா பரிவர்த்தனை' மூலமாகவே வசூலிக்கப்படும். எனவே, போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை இனி பணமாக செலுத்த வேண்டாம்".

இவ்வாறு, அதில் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT