முதல்வர் பழனிசாமி மினி கிளினிக்கை திறந்து வைக்கிறார். 
தமிழகம்

மக்கள் சேவையே உயர்ந்த பணி; நான் முதல்வர் என்ற எண்ணத்தில் இருந்ததே கிடையாது: முதல்வர் பழனிசாமி

செய்திப்பிரிவு

துறைகள் வாரியாக தமிழக அரசு தேசிய விருதுகள் பெற்றுக் கொண்டிருப்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 18), சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், முத்துநாயக்கன்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசியதாவது:

"சேலம் மாவட்டம் முதல்வரின் மாவட்டம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வேறு மாவட்டத்திலிருப்பவர் முதல்வராக இருந்தால் சேலம், முத்துநாயக்கன்பட்டிக்கு வர முடியுமா? நான் ஏற்கெனவே பல முறை முத்துநாயக்கன்பட்டிக்கு வந்து கூட்டங்களில் பேசிச் சென்றுள்ளேன். அன்றைக்கு இருந்த பழனிசாமியாகவே இப்போதும் உள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை, உங்களுக்கு பணி செய்கின்ற பொறுப்பைத்தான் எனக்குத் தந்திருக்கிறார்கள். நான் முதல்வர் என்ற எண்ணத்தில் இருந்ததே கிடையாது, இருக்கப்போவதும் இல்லை. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய உயர்ந்த பணியை என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். அதைச் சிந்தாமல், சிதறாமல், நீங்கள் நினைப்பதை நிறைவேற்றுகிற முதல்வராக நான் பணியாற்றுவேன்.

அந்த அடிப்படையில்தான், கிராமத்தில் பிறந்து, வளர்ந்த காரணத்தினால், கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள ஏழைகள் மருத்துவ வசதி பெறுவதற்கு போராடிக் கொண்டிருந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் நான் கொடுத்திருக்கிறேன்.

என்னுடைய சிறு வயதில், உடல்நிலை சரியில்லாதபோது, எங்கள் கிராமத்திலிருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள எடப்பாடி அல்லது 24 கி.மீ. தொலைவிலுள்ள பவானிக்கு செல்ல வேண்டும். அப்படிப்பட்ட நிலை இருக்கக்கூடாது, நான் பட்ட கஷ்டத்தை, தமிழகத்தில் ஏழைகள் எவரும் பெறக்கூடாது, அவர்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்க வேண்டும்.

இந்தப் பகுதியில் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தியது தமிழக அரசு. இதுபோன்று தரம் உயர்த்துகின்றபோது, அந்தந்தப் பகுதிகளிலேயே மாணவர்கள் உயர்கல்வி கற்க முடியும்.

ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகப் பணியாற்றி முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவத் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, கல்வித் துறை ஆகிய துறைகளில் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் துறையில், நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு, துறைகள் வாரியாக தமிழக அரசு தேசிய விருதுகள் பெற்றுக் கொண்டிருப்பது ஒருவர் கண்ணுக்கு மட்டும், ஸ்டாலினுக்கு மட்டும் தெரியவில்லை. நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சரியான திட்டங்களைக் நிறைவேற்றுகிறோம், அவை மக்களை சென்றடைகிறது. தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களின் நிலைகளுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு நமக்கு தேசிய விருது வழங்கியுள்ளார்கள். பாராட்ட மனமில்லாவிட்டாலும் அவதூறாகப் பேசாமல் இருந்தாலே நல்லது".

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT