புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை உறுதிப்படுத்தும் வகையில், விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ்-திமுக தரப்பு தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டணியிலுள்ள ஆதரவுக்கட்சியினர் இரு போராட்டத்துக்கும் சென்று பங்கேற்றனர்.
மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 விவசாயச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (டிச. 18) உண்ணாவிரத போராட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச செயலாளர் ராஜாங்கம் மற்றும் மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், கூட்டணிக்கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில் நண்பகல் வரை அமைச்சர் நமச்சிவாயம் இப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதேநேரத்தில் இப்போராட்டத்தில் திமுகவினர் யாரும் பங்கேற்கவில்லை. திமுகவினர் தனியாக திருக்கனூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில், புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ (தெற்கு), சிவக்குமார் (வடக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர்.
தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணிக்கட்சியான திமுகவுக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை தனித்தனிப் போராட்டங்கள் உறுதிப்படுத்தின.
அதேநேரத்தில் கூட்டணிக்கட்சிகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் இரு போராட்டங்களுக்கும் சென்று பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.