போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் திமுக, கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு டெல்லி போராட்டக்குழு தலைவர்கள் நேரில் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதை எதிர்த்து, அந்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும் திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக அதன் தோழமைக்கட்சிகளுடன் இணைந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், தங்கபாலு, ஜவாஹிருல்லா, திமுகவின் முன்னணி தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் முதலில் ஸ்டாலின் தொடக்க உரையாற்றினார். பின்னர் தலைவர்கள் தொடர்ந்து பேசினர். அப்போது உண்ணாவிரதம் நடந்த அரங்குக்கு டெல்லியிலிருந்து போராடும் விவசாய குழுவின் பிரதிநிதிகள் நேரில் வந்தனர்.
ஸ்ரீ குருநானக் சத் சங்க் சபா மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தமிழகத் தலைவர் ஹர்பன்ஸ் சிங் அவர்கள் தலைமையில் அதன் உறுப்பினர்கள் ரவிந்தர் சிங் மதோக், ஜித்தேந்தர் சிங் ஆனந்த், பல்பீர் சிங், சுவேந்தர் சிங் செட்டி, ஹர்பிரீத் சிங், மன்பிரீத் சிங், பிரித்பால் சிங், கமல் ஜீத் சிங் ஆகியோரும், அனைத்திந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் குணசேகரன் ஆகியோரும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அவர்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். அவர்கள் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு சால்வை அணிவித்து தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர் பேசிய அதன் பிரதிநிதி தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்துக்கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். பஞ்சாபிகள், தமிழர்கள் சகோதரர்கள் என தெரிவித்த அவர் பிரதமர் மோடிக்கு இந்த போராட்டம் ஒரு எச்சரிக்கை எனத் தெரிவித்தார்.