புதுச்சேரி அருகே அரசு பள்ளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சாதி பெயரை கொண்ட தலைவர்களின் பெயர்களை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் தேசிய மற்றும் உள்ளூர் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக பள்ளிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அண்மையில் 8 பள்ளிகளின் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பள்ளிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, புதுச்சேரி அடுத்த மடுகரை கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது மறைந்த முன்னாள் முதல்வரான வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாகவும், அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியானது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப்புராய கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளியாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சாதி பெயரையும், சாதி சார்ந்த தலைவர்களின் பெயர்களையும் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளிகளுக்கு பொதுவான தலைவர்கள் பெயர்களை வைக்க வலியுறுத்தியும் மடுகரை கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அங்குள்ள புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் இன்று (டிச. 18) திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அங்கு வந்த நெட்டப்பாக்கம் காவல்துறையினர் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயவேணி உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலையச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, "எங்கள் பகுதியில் இயங்கி வரும் 5 பள்ளிகளும் இதுநாள் வரை சாதியின் பெயரை குறிப்பிடாமல் இயங்கி வருகின்றன. தற்போது சாதி சார்ந்த தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. அரசே குறிப்பிட்ட சாதியை திணித்து ஒரு கட்டமைப்பை உருவாக்குகின்றனர். நாங்கள் சாதி வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுமையுடன் இருக்கிறோம். ஆனால் தற்போது சாதியின் பெயரால் பிளவுபடுத்த பார்க்கின்றனர். குறிப்பிட்ட சாதியின் பெயரை சூட்டுவது, எதிர்காலத்தில் மாணவர்களிடம் அதுவே அடையாளமாக மாறிவிடும். எனவே, குறிப்பிட்ட சாதியின் பெயரை நீக்கிவிட்டு, தலைவர்களின் பெயரை மட்டும் சூட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.