இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேசுவரம், தூத்துக்குடியைச் சேர்ந்த 36 மீனவர்கள் மற்றும் 5 படகுகளை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 36 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் டிச.14-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை விடுவிப்பதில்லை என்ற இலங்கை அரசின் நிலைப்பாடு, தமிழக மீனவர்கள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தாங்கள் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, இலங்கை உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, 36 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 5 விசைப் படகுகளையும் விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கஇந்திய வெளியுறவுத் துறைக்கு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.