தமிழகம்

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது- கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு

செய்திப்பிரிவு

சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த103 கிலோ தங்கம் மாயமானதுகுறித்து சிபிசிஐடி அதிகாரிகள்விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக கண்காணிப்புகேமரா காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர்.

சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் சுரானா என்ற தங்கம் இறக்குமதி செய்யும் நிறுவனம் உள்ளது. தங்கம் இறக்குமதியில் மோசடி நடந்ததாக கூறி, 2012-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கமும், சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைத்தே சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும், 400 கிலோதங்கம் பறிமுதல் செய்ததாக தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, எஸ்பிஐ, பஞ்சாப்நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு ஆகிய வங்கிகளிடம் சுரானா நிறுவனம் பெற்ற ரூ.1,160கோடியை ஈடுகட்ட ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சிறப்பு அதிகாரியிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்தபோது 296 கிலோ தங்கம் மட்டுமேஇருந்தது. 103 கிலோ 864 கிராம் தங்கம் மாயமாகி இருந்தது.மாயமான தங்கத்தை கண்டுபிடிக்கும் பொறுப்பு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தங்கம் மாயமானது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக சுரானா நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கெனவே பதிவாகி அழிக்கப்பட்டிருக்கும் காட்சிகளையும் ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் திரும்பஎடுத்து ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காக சைபர் கிரைம் போலீஸாரையும் அழைத்து வந்துள்ளனர்.

சுரானா நிறுவனத்துக்கு அருகேசில கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சிபிசிஐடி போலீஸார்வாங்கிச் சென்றுள்ளனர்.

SCROLL FOR NEXT