டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் இன்று நடக்கவுள்ள திமுக கூட்டணி கட்சிகளின் உண்ணாவிரதபோராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த8-ம் தேதி நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே டிச.18-ல் (இன்று) ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், எம்.பி., எம்எல்ஏக்களும் பங்கேற்பார்கள் என்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இது பற்றிசென்னை பெருநகர காவல் துறைஅதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசு அறிவித்துள்ள கரோனா ஊரடங்கு தளர்வுகளில், பொதுஇடங்களில் ஒன்றுகூடி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை நீடிக்கிறது. எனவே, திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை" என்றனர்.
அனுமதி மறுத்தாலும் தடையைமீறி உண்ணாவிரதப் போராட்டம்நடத்தவும், கைது செய்யப்பட்டாலும் உண்ணாவிரதத்தை தொடரவும் திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.