தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 1,35,147 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த டிச.2-ம் தேதி முதல் 'புரெவி' புயல் காரணமாக பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் 11,730 ஹெக்டேரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி கடந்த 15-ம் தேதி ஆய்வின்போது தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது மீண்சும் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால், ஏற்கெனவே அறுவடை செய்யும் நேரத்தில் மழையால் கீழே சாய்ந்த நெற்கதிர்கள் உள்ள வயல்களில் மீண்டும் தண்ணீர் தேங்கி, நெற்கதிர்கள் முளைவிடத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, தஞ்சாவூர் அருகே வாண்டையார் இருப்பு, துறையுண்டார்கோட்டை, மூர்த்தியம்பாள்புரம், சடையார்கோவில், ராகவம்பாள்புரம், கீழஉளூர் போன்ற இடங்களில், அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து துறையுண்டார்கோட்டை விவசாயி அன்பரசன் கூறியதாவது:
எனக்கு சொந்தமான 7 ஏக்கர் நெல் வயலில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அறுவடை செய்யும் நிலையில் உள்ள நெற்கதிர்கள் நீரில் மூழ்கி, முளைவிடத் தொடங்கிவிட்டன. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தும், அதற்குரிய மகசூலை பெற முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளோம் என்றார்.
வேளாண் அதிகாரிகள் கூறியபோது, “பல இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதுபற்றி கணக்கெடுத்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றனர்.