என்எல்சி ஊழியர்களுக்கான ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிர்வாகத்துக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையே நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டின்படி பணி நீக்கம் செய்யப்பட்ட 11 பேருக்கும் மீண்டும் வேலை வழங்க பட உள்ளது.
நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் 12 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு அளிக்கும் வகையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டின்படி, என்எல்சி நிரந்தர தொழிலாளர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு, 3 சதவீத ஊதிய ஊக்கத் தொகை, அடிப்படை ஊதியத்தில் 3 சதவீத ஊக்கத் தொகை, 15 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 3 சதவீத ஊதிய ஊக்கத் தொகை வழங்கும் வகையில் உடன்பாடு ஏற்பட்டது.
தொழிலாளர்கள் ஏற்கெனவே இடைக் கால நிவாரணம் பெற்று வருவதால், தற்போது உடன்பாடு ஏற்பட்டிருந்தாலும் தொழிலாளர்கள் எதிர்பார்க்க கூடிய நிலுவைத் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தெரிகிறது. உடன்பாட்டின்போது ஏற்படுத்தப்பட்ட இதர ஷரத்துக்கள் குறித்தும் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் அதிமுக தொழிற்சங்கம் இதுவரை கையெழுத்திட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தொழிற்சங்க செயலாளர் உதயக்குமார், “11 தொழிலாளர் களுக்கும் மீண்டும் வேலை வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனாலும், அவர்கள் வேலைக்குச் செல்கிற அன்றுதான் நாங்கள் உடன்பாட்டில் கையெழுத்திடு வோம்” என்றார்.