சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 3,754 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த நவம்பர் 16-ம்தேதி வெளியிடப்பட்ட வரைவுவாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களின்படி, சென்னை மாவட்டத்தில் 39 லட்சத்து 40 ஆயிரத்து 704 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தற்போது மாநகராட்சிக்கு10,214 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 7,810 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 8,404 விவிபாட் இயந்திரங்கள் தேவை. ஏற்கெனவே கையிருப்பில் இருந்த இயந்திரங்கள் போக, அதற்கு மேல் தேவைப்படும் 4,320 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,820 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 7,770 விவிபாட் இயந்திரங்கள் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து வந்துக்கொண்டிருக்கின்றன. இவை புழல் பகுதியில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. கையிருப்பில் உள்ள இயந்திரங்களைதேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில், அவற்றின் செயல்பாட்டை சரிபார்க்கும் பணிகள் 16-ம் தேதி தொடங்கியுள்ளது
அதற்காக பெங்களூருவில் உள்ள பாரத மின்னணு நிறுவன பொறியாளர்கள் சென்னை வந்துள்ளனர். இப்பணிகளை பார்வையிட அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முன்னிலையில் இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.