தமிழகம்

சுங்கச் சாவடிகளில் சலுகை பறிப்பு நஷ்டத்தை நோக்கி அரசுப் பேருந்துகள்

வ.செந்தில்குமார்

பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடி வழியாக இயக்கப் படும் அரசுப் பேருந்துகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் போக்குவ ரத்துக்கழகம் பெருத்த நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாவில் இருந்து கிருஷ்ணகிரி வரை சுமார் 160 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி கடந்த 2012 முதல் நடந்துவருகிறது. இந்த பணியை எல் அண்டு டி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு வாணியம்பாடி, பள்ளிகொண்டா மற்றும் தொப்பூர் சுங்கச்சாவடியில் 30 ஆண்டுகள் கட்டணம் வசூலிக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், பேருந்து மற்றும் லாரிகள் ஒரு முறை வந்து செல்வதற்கான கட்டணம் ரூ.375. ஒரு மாத கட்டணம் ரூ.8,350 என அதிகரிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு 50 டிரிப்புகள் மட்டும் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பள்ளி கொண்டா சுங்கச்சாவடி அருகே தனிப்பாதை அமைக்கப்பட்டு, அதில் அரசுப் பேருந்துகள் இயக் கப்பட்டன. பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு மாத கட்டணத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் அமலுக்கு வந்தது

இதற்கிடையில், ஒரு மாத பாஸ் திட்டத்தில் 50 முறைக்கு மேல் வந்து சென்றால் அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என விழுப்புரம் மற்றும் சேலம் மண்டல அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் செய்வது தெரியாமல் தவிக்கின்றனர்.

விழுப்புரம் மண்டலத்தில் உள்ள வேலூர் கோட்ட அரசு போக்கு வரத்துக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 730 பேருந்துகள் உள்ளன. வேலூரில் இருந்து சென்னை, பெங்களூர், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருப்பதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வழியாக சுமார் 275 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தனியார் பேருந்துகளுக்கு சலுகை

நிபந்தனைப்படி கட்டணத்தை செலுத்தினால் போக்குவரத்துக் கழகத்துக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.26 லட்சம் செலவு ஏற்படுகிறது. இது வேலூர் கோட்ட போக்குவரத்து கழகத்தின் நிகர லாபத்தின் பெரும் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தனியார் பேருந்துகளுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.

இதே தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொப்பூர் சுங்கச்சாவடியில் மாதாந்திர கட்டணத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற நிலை உள்ளது. பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடியில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது எந்த விதித்திலும் நியாயம் இல்லை என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளர் நரேஷ் கூறுகையில், ‘‘மத்திய அரசின் சிஏஜி தணிக்கையின்படி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வழியாக அரசுப் பேருந்துகளின் இயக்கம் அதிகப்படியாக இருக்கிறது. இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப பங்குத் தொகை அளிக்க வேண்டும் என கூறுகிறார்கள். அந்த தொகையை நாங்கள் வசூலிக்கவே இல்லை. சலுகை வழங்கியதால் நாங்கள்தான் நெடுஞ்சாலை ஆணையத்துக்கு பெரும் தொகை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மற்றும் சேலம் மண்டல அரசு போக்குவரத்துக்கழ கங்கள் எங்களுக்கு ரூ.7 கோடிக்குமேல் கட்டண பாக்கி வைத்துள்ளன.

தொப்பூர் சுங்கச்சாவடியில் 1997-ம் ஆண்டு விதிகளின்படி கட்டணம் வசூல் செய்யப்படு கிறது. வாலாஜாவில் இருந்து கிருஷ்ணகிரி வரை 6 வழிச்சாலை திட்டம் என்பதால் 2008-ம் விதிகளின்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என்றார்.

பெருத்த நஷ்டம்

2008-ம் ஆண்டு விதிகளின்படி ஒவ்வொரு பேருந்தும் மாதத்துக்கு ரூ.76 ஆயிரம் வரை செலுத்த வேண்டியிருக்கும். இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தால் அரசு போக்குவரத்துக்கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்தி பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான். இதனை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT