தமிழகம்

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொது நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அகில இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ), மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு முறைகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீட்டு கொள்கையின்படி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்பது பெரும் சுமையாகவும் செலவு மிக்கதாகவும் இருந்தது. எனவே, எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி 2007-ல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

எம்பிபிஎஸ்., பிடிஎஸ் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக எம்சிஐ வெளியிட்ட அறிவிப்பை 2013-ல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மருத்துவக் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடும் அதிகாரம் எம்சிஐ-க்கு இல்லை என்றும் நாடு தழுவிய நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசின் உரிமையில் தலையிடும் செயல் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். கல்வியில் மத்திய அரசு தலையிடுவது தமிழகம் நீண்டகாலமாக பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT