சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 300 ஏக்கருக்கு முறைகேடாக பட்டா வழங்கியதாக அமைச்சர் ஜி.பாஸ்கரன் முன்னிலையில் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தெரிவித்தார்.
அவர் காரைக்குடியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடந்த விழாவில் பேசியதாவது: காரைக்குடி தொகுதியில் ஏராளமான முதியோருக்கு உதவித்தொகை வழங்கவில்லை.
அவர்களை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 300 ஏக்கர் வரை முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முறைகேடாக வழங்கிய நிலங்களை ஆய்வு செய்து பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். காரைக்குடியில் குறித்த காலத்திற்குள் பாதாளச் சாக்கடை பணி முடியாததால் சாலைகளில் நடமாட முடியவில்லை.
இதுகுறித்து 15 முறை கூட்டங்கள் நடத்தி ஒப்பந்ததாரர், அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று கூறினார்.
விழாவிற்கு பிறகு கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் லஞ்சப் புகாரில் சிக்கிய அரசு அதிகாரிகள் வீட்டில் கோடிக் கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் சிக்கியுள்ளது.
அதிகாரிகளே முறைகேடாக சம்பாதிக்கும்போது, அந்தத் துறை அமைச்சர்கள் எவ்வளவு ஊழல் செய்திருப்பர் என்பதை பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் நிதிநிலைமை மோசமாக உள்ளது. ஏறக்குறைய ரூ.5 லட்சம் கோடி பற்றாக்குறை உள்ளது. அனைத்து துறைகளிலும் லஞ்சம் புரையோடிப் போயுள்ளது.
கோடிகளை கொடுத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என அதிமுக நினைக்கிறது. ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அது ஒரு இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரியும். பணத்தால் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது.
கரோனா வைரஸ் தொற்று கால செலவுகளை வெளிப்படையாக அரசு அறிவிக்க வேண்டும். கண்மாய் தூர்வார ஒதுக்கிய நிதியில் 25 சதவீதத்திற்கு மட்டுமே வேலை நடந்துள்ளது. 75 சதவீத தொகை கமிஷனாக போய் விட்டது.
ஓட்டுக்கு பணம் வாங்குவதும் ஒரு வகை ஊழல் தான். இதனால் மக்கள் மனநிலை மாற வேண்டும். மாறுதலைக் கொண்டு வருவோம் என உச்ச நடிகர்கள் 2 பேர் கூறுகின்றனர். என்ன மாறுதலைக் கொண்டு வரப்போகின்றனர் என்பது தெரியவில்லை, என்று கூறினார்.