தமிழகம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.22-ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை

செய்திப்பிரிவு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 22-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா நேற்று பழநியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா காலத்தில் வியாபாரிகள் மீது தொடரப்பட்ட ஆயிரக்கணக்கான விதிமீறல் வழக்குகளை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.

பழநி மலைக்கோயிலில் மந்தமாக நடைபெறும் இரண்டாவது ரோப்கார் பணியை விரைந்து முடிக்கவேண்டும். பழநியை திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்.

மதுரை- சென்னை தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில்நிலையத்தில் நின்று செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு அலட்சியம் செய்யாமல் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டங்களை வாபஸ் பெறவேண்டும்.

விவசாயிகள் போராட்டம் தொடரும் பட்சத்தில் டிசம்பர் 22 ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழக சட்டபை தொகுதிகளில் ஒரு தொகுதியை வியாபார பிரதிநிதிகளுக்கு ஒதுக்கவேண்டும். வணிகவரித்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கவேண்டும். வணிகர்நல வாரியத்தை செயல்படுத்தவேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT