அரக்கோணத்தில் ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்த முதுநிலை ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையாளர் செந்தில். 
தமிழகம்

ஆன்லைன் டிக்கெட் மோசடியைத் தடுக்க விரைவில் சைபர் குற்றப்பிரிவு: முதுநிலை ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையாளர் செந்தில் தகவல்

வ.செந்தில்குமார்

ரயில்வே ஆன்லைன் டிக்கெட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ரயில்வே பாதுகாப்புப் படையில் விரைவில் சைபர் கிரைம் பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளதாக சென்னை கோட்ட முதுநிலை ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையாளர் செந்தில் தெரிவித்தார்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையாளர் செந்தில் இன்று (டிச.17) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ரயிலில் பயணிக்கும் பெண்களுக்காக ‘என் தோழி’ என்ற திட்டத்தின் மூலமாக சிறப்பு எண்-182 வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பை ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம் பெண் பயணிகள் தாங்கள் இறங்கும் பகுதி வரை முழுமையாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.

தற்போது 50 சதவீத ரயில் சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள் பொதுப் பயணத்திற்காக அனைத்து ரயில் சேவைகளும் தொடங்க வாய்ப்புள்ளது. ரயில்களில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகப் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை.

ரயில்வே பாதுகாப்புப் படையில் விரைவில் சைபர் குற்றப்பிரிவு தனியாக அமைக்கப்பட உள்ளது. ஆன்லைன் மூலமாக மோசடியாக டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் இடைத்தரகர்கள் கும்பலைப் பிடிப்பதற்காக இத்திட்டம் செயல்பட உள்ளது.

தற்போது வரை ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் மோசடியில் ஈடுபட்டதாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளின் உடல் வலிமையை அதிகரிக்கத் தனி உடற்பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT