தமிழகம்

டிச.19, 20-ல் கோழிக்கறிக் கடைகள் அடைப்பு: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கறிக்கோழி மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாக அறிவிப்பு

இ.ஜெகநாதன்

‘‘கறிக்கோழிகள் கொள்முதல் நடைமுறையில் மாற்றம் செய்ததைக் கண்டித்து டிச.19, 20-ம் தேதி கறிக்கடைகள் அடைக்கப்படும்,’’ என சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கறிக்கோழி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் மணிமாறன் தெரிவித்தார்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கறிக்கோழி மொத்த வியாபாரிகள் சங்க கூட்டம் சிவகங்கையில் நடந்தது. தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை கொள்முதல் செய்து கறிக்கடை, ஓட்டல்களில் வழங்குகிறோம். நாங்கள் வாகனங்களில் ஏற்ற செல்லும்போது, கோழிகளுக்கு தீவனம் கொடுக்க கூடாது.

சில மணி நேரங்களுக்கு முன்பாகவே கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். அப்போது தான் எடையில் மாற்றம் இருக்காது. ஆனால் தற்போது கோழி நிறுவனங்கள் பண்ணை உரிமையாளர்களின் லாபத்தை அதிகரிக்கும் வகையில் வாகனங்களில் ஏற்றும் வரை கோழிகளுக்கு தீவனம் கொடுக்கலாம் என கூறியுள்ளது.

தற்போது அதன்படி பண்ணை உரிமையாளர்கள் கோழிகளை எங்களுக்கு வழங்குகின்றனர். தீவனம் உடனடியாக சத்தாக மாறாது என்பதால், கோழிகளை கறிக்கடை, ஓட்டல்களில் இறக்கும்போது அதன் எடை குறையும். அதன்பிறகும் எடை குறையும்.

இதனால் எங்களுக்கும், கறிக்கடை, ஓட்டல்களுக்கும் நஷ்டம் ஏற்படும். இதனால் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் நுகர்வோரும் பாதிக்கப்படுவர். இதனால் ஏற்கனவே இருந்த நடைமுறையிலேயே கோழிகளை கொள்முதல் செய்ய கோழி நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். நடவடிக்கை இல்லாவிட்டால் டிச.19, டிச.20-ல் தமிழகம் முழுவதும் கோழிக்கறிகடைகள் மூடப்படும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT