தமிழகம்

நெல்லையில் டிச.27-ல் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு: நல்லகண்ணு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

அ.அருள்தாசன்

நெல்லையில் வரும் 27-ம் தேதி சமூகநீதி நூற்றாண்டு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக மாநாடு ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் சூர்யா சேவியர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமூகநீதிக்கான போராட்டத்தை இந்திய அளவில் முன்னெடுத்ததில் தமிழகம் முதன்மையானது. 1916-ல் தென்னிந்திய நலஉரிமை சங்கம் தொடங்கப்பட்டு குரல் எழுப்பப்பட்டது. 1919-ல் காங்கிரஸில் இணைந்த பெரியார், 1920 ஜூன் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை எழுப்பினார். சமூகநீதிக்கான பெரியாரின் முதல் குரல் திருநெல்வேலியிலிருந்தே ஒலித்தது. அதை தொடர்ந்து தமிழகத்தில் சமூகநீதிக்கான போராட்டம் தொடங்கி நடைபெற்றது.

1920-ல் திருநெல்வேலியில் தொடங்கிய சமூகநீதிக்கான போராட்டம் தற்போதுவரை தொடர்கிறது. மத்திய, மாநில அரசுகளால் சமூகநீதி தற்போது மறுக்கப்படுகிறது. இடஒதுக்கீட்டை அழித்து ஒழிக்கும் முயற்சிகளில் அரசுகள் ஈடுபடுகிறது. இந்நிலையில் 1920-2020 நூற்றாண்டு சமூகநீதிக்கான வரலாற்றை முன்வைத்து, ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து, வரும் 27-ம் தேதி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் இந்த மாநாட்டை நடத்துகிறோம். பொதுவுடமை இயக்க மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டை நிறைவு செய்து பேசுகிறார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்குகிறார் என்று தெரிவித்தார். விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT