மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மார்ச் 15-ல் நிறைவடையும் என உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சர்க்கரை முகமது, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.159.70 கோடி நிதியில் புதுப்பிக்கப்படுகிறது. இதற்காக பேருந்து நிலையம் 2019 ஜனவரியில் இடிக்கப்பட்டது.
கட்டுமானப்பணியை விரைந்து முடிக்கக்கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் 2018 நவம்பர் 16-ல் விசாரணைக்கு வந்தபோது, 18 மாதத்தில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
பெரியார் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடியவுள்ள நிலையில் இன்னும் கட்டுமானப் பணிகள் முடியவில்லை. தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் ஓட்டுநர்கள், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, பெரியார் பேருந்து நிலையம் அருகே செயல்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் போதுமான கழிவறை, குடிநீர், மேற்கூரை வசதி ஏற்படுத்தவும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைவில் முடிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகராட்சி சார்பில் 80 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், 80 சதவீத பணிகள் முடிவடையவில்லை. 40 முதல் 42 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன என்றார். அதற்கு மாநகராட்சி வழக்கறிஞர், பணிகள் விரைவாக நடந்து வருகிறது. மார்ச் 15-க்குள் பணிகள் முடிக்கப்படும் என்றார்.
பின்னர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.