முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை மாவட்ட அலுவலகங்களில் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், முதலமைச் சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளவர் களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரையில் சிகிச்சை பெறலாம். மேலும் 1,016 நோய்களுக்கு சிகிச்சையும், 23 நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில், இத்திட்டத் தின்மூலம் முதற்கட்டமாக 5,17,638 பயனாளிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 1,23,848 பயனாளிகளுக்கும் மொத்தம் 6,41,485 பேருக்கு முதலமைச் சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 62,119 பயனாளிகளுக்கு ரூ.123.44 கோடி மதிப்பில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த காப்பீட்டு திட்ட அட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் வழங்கப்பட்டு வருகி றது. அட்டை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக பயனாளிகள் புகார் தெரி வித்துள்ளனர். இதனால், கோட் டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.
இதுகுறித்து, சோழிங்கநல்லூர், செய்யூர் பகுதியை சேர்ந்த பயனாளி கள் கூறியதாவது: மருத்துவக் காப்பீடு அட்டை பெறுவதற்காக, 90 கிமீ தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அங்கும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளித்தும், நாள்தோறும் 50 அட்டை வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.
அதனால், விபத்தில் காயமடை யும் ஏழை மக்களை கருத்தில் கொண்டு, கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
உடனடி சிகிச்சை
இதுகுறித்து, மருத்துவக் காப்பீட்டு திட்ட அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: அரசு உத்தரவிட்டால் மட்டுமே கோட்டாட்சியர், வட்டாட்சி யர் அலுவலகங்களில் செயல்படுத்த முடியும். மேலும், விபத்தில் காயமடை யும் நபர்களின் அவசியம், அவசரம் கருதி சம்மந்தப்பட்ட மருத்துவ மனையை தொடர்புகொண்டு, உடனடி யாக சிகிச்சை அளிக்க தொலை பேசியில் தகவல் தெரிவிக்கின்றோம். பின்னர், அட்டையை சமர்பித்து சிகிச்சை கட்டணம் செலுத்தப்படுகிறது என வட்டாரங்கள் தெரிவித்தன.