"வரும் சட்டப்பேரவை தேர்தலில் விரும்பி வருபவர்களுடன் முதல்வர், துணை முதல்வர் கூட்டணி அமைப்பாளர்கள்" என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தல் நேரத்தில் அவரவர் விருப்பப்படி கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு யாரும் தடைபோட முடியாது. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக தெரிவித்துள்ளார். இன்னும் பதிவு செய்யப்படவில்லை.
ரஜினிகாந்த் நேரடியாக அவரது கட்சியின் பெயரையும் சின்னத்தையும் அறிவிப்பார். அவர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அதன் பின்னர் தேர்தலின் போது யாருடனும் கூட்டணி வைக்கலாம். கூட்டணிகள் மாறலாம். புதிய கூட்டணிகள் உருவாகலாம்.
இதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களைப் பொருத்தவரை மக்களுடன் தான் கூட்டணி. கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்த கட்சி அதிமுக.
அதிமுகவின் வலிமையை நிரூபித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை விரும்பி வரும் வருபவர்களுடன் முதல்வரும், துணை முதல்வரும் கூட்டணி அமைப்பார்கள். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவோம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கூட்டணி குறித்து பகிரங்கமாக அறிவிப்பேன். இதுவரை கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை என தெரிவித்துள்ளார். ஊழலை எதிர்த்து தோற்றுவிக்கப்பட்ட கட்சி அதிமுக தான்" என்றார் அவர்.