ஐஐடியில் கரோனா தொற்றுப் பரவலை அடுத்து சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 210 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3,773 பேருக்குத் தொற்று இல்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை, அடையாறு ஐஐடியில் மாணவர்கள், மெஸ் பணியாளர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதில் கடைசி 3 நாட்கள் நடந்த பரிசோதனையில் 104 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் 79 மாணவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 183 ஆனது.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. ஆனாலும், முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பொதுமக்களிடம் முதல்வர், அமைச்சர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் பொது சுகாதாரத்துறை, மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தொடர்ந்து கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக விலகல், முகக்கவசம் குறித்து என்னதான் வலியுறுத்தினாலும் அதைக் கடைப்பிடிக்காத போக்கை இன்றும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று அச்சம் காரணமாக இன்றுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்லூரிகளில் இளநிலை இரண்டாம் ஆண்டு, முதுநிலை இறுதியாண்டுக்கான வகுப்புகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையின் முக்கியக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான அடையாறு ஐஐடியில் கரோனா தொற்று திடீரென பரவியது. மெஸ்ஸில் ஊழியர்களுக்குப் பரவிய கரோனா தொற்று மாணவர்களுக்குப் பரவியதா? அல்லது வெளியே சென்று வந்த மாணவர்கள் மூலம் அனைவருக்கும் பரவியதா? எனத் தெரியவில்லை.
திடீரென பரவிய கரோனா தொற்றைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒரே நாளில் 87 மாணவர்கள் உட்பட 104 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
ஐஐடி சம்பவத்தைப் பாடமாக எடுத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கட்டாயம் பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி, கல்லூரி மாணவர்களுக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனையை மேற்கொண்டது.
இதுகுறித்து இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் கல்லூரி மாணவர்கள் மொத்தம் 6,344 பேருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 210 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,773 பேருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் 2,361 பரிசோதனை முடிவுகள் வரவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.