முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

அம்மா மினி கிளினிக்; உழைக்கும் வர்க்கத்துக்கு நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டுமென்பதே நோக்கம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

செய்திப்பிரிவு

உழைக்கும் வர்க்கத்திற்கு நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டுமென்பதற்காகத் தான் அம்மா மினி கிளினிக்கைத் தொடங்கியிருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.17), சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரம், லத்துவாடியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

"காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை நாடி தங்களுடைய நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கு இங்கேயே ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இருந்து, அங்கு வருகின்ற நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள்.

ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் அம்மா மினி கிளினிக்கிலும் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். எனவே, கிராமத்தில் வாழ்கின்ற குறிப்பாக ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளோம்.

உழைக்கும் வர்க்கத்திற்கு, விவசாயி, விவசாயத் தொழிலாளிகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டுமென்பதற்காகத்தான் இதனைத் தொடங்கியிருக்கின்றோம்.

பொதுமக்கள், ஏதாவது சிறிய நோய்கள் ஏற்படின் இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்ற சூழ்நிலை ஏற்பட்டால், தாலுக்கா மருத்துவமனைக்கோ அல்லது சேலத்தில் இருக்கும் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கோ அனுப்பி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, குணமடையச் செய்வோம்.

நடமாடும் மருத்துவக் குழுவும் உள்ளது. நோய் அதிகமாக இருக்கிறது என்று கண்டறியப்படும் கிராமங்களுக்கு உடனடியாக அந்த மருத்துவக் குழு சென்று, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்யக்கூடிய நிலையைத் தமிழக அரசுதான் உருவாக்கித் தந்திருக்கின்றது. கிராமத்திலிருக்கின்ற மக்கள் நகரத்திற்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டுமென்றால் போதிய வாகன வசதியில்லாத ஒரு சூழ்நிலையில், புதிதாக 500 எண்ணிக்கையில் 108 வாகனங்களை தந்த அரசு தமிழக அரசு.

தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோய் கடுமையாக இருந்தது. அதைக் கட்டுப்படுத்தி, படிப்படியாகக் குறைத்து, இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் குறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. கேரளாவைப் பார், டெல்லியைப் பார் என்று இங்கே இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரிலிருந்து பல்வேறு கட்சித் தலைவர்களெல்லாம் விமர்சனம் செய்தார்கள். இப்போது தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. கேரளாவிலும், டெல்லியிலும் அதிகமாகியிருக்கிறது. இப்போது அதைப் பற்றி எதுவும் பேசுவதில்லை.

வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் செய்கின்ற அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் தமிழக அரசு மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கிராமங்கள் வளர வேண்டும். கிராமத்தில்தான் அதிகமான அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் 41 சதவீதம் மாணவர்கள் படிக்கின்றார்கள். அதாவது, தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் 8 லட்சத்திற்கும் மேலாகப் பயில்கின்ற மாணவர்களில், அரசுப் பள்ளிகளில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றார்கள். அதில், கடந்த ஆண்டு 6 மாணவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்தது.

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின், மருத்துவராக வேண்டுமென்ற கனவை நனவாக்குவதற்கு தமிழக அரசு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை அளித்து இந்த ஆண்டு 313 மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனை.

நீட் தேர்வை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அப்போது, 41 விழுக்காடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 40 இடங்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்தது.

நீட் தேர்வுக்கு முன்பு, திமுக அரசில், நுழைவுத் தேர்வு மூலமும் 40 மாணவ, மாணவிகளுக்குத்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஜெயலலிதா நுழைவுத் தேர்வை நீக்கினார். அதன்பிறகு, 2010-ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திமுக மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த காலகட்டத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

ஆகவே, நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு பயில இடம் கிடைக்கவில்லை. நானும் அரசுப் பள்ளியில் படித்தவன் என்பதனால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்க வேண்டுமென நினைத்தேன், அதற்கு ஒரே வழி உள் ஒதுக்கீடு. இதற்கு எதிர்க்கட்சிகளோ, பொதுமக்களோ கோரிக்கை வைக்கவில்லை. நானே நடைமுறையைப் பார்த்து 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு ஏற்படுத்தியதால், இந்த ஆண்டு 313 மாணவ, மாணவிகளுக்கு மருத்துப் படிப்பு பயில இடம் கிடைத்துள்ளது, பல் மருத்துவக் கல்லூரியில் 87 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு மேலும் கூடுதலாகக் கிடைக்கும். ஏனென்றால், 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை ஒரே நேரத்தில் தொடங்கியதன் விளைவாக கூடுதலாக 1,650 இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதனால், கூடுதலாக 135 மாணவச் செல்வங்கள் மருத்துவப் படிப்புப் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு ஏறத்தாழ 435 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். இவ்வாறு இரவு, பகல் பாராமல் மக்களுக்காகப் பாடுபடுகிற ஒரே அரசு தமிழக அரசு".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

SCROLL FOR NEXT