அரியலூருக்கு இன்று (டிச. 17) வருகை தரும் தமிழக முதல்வர் பழனிசாமி நகராட்சி அலுவலகம், மருதையாறு பாலம் உட்பட ரூ.36.73 கோடி மதிப்பிலான முடிவுற்ற 39 பணிகளை திறந்து வைத்தும், ரூ.26.52 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.129.34 கோடி மதிப்பில் 21 ஆயிரத்து 504 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தொடர்ந்து, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
பின்னர், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.
இதனையொட்டி, முதல்வர் வருகை தரும் சாலையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2,000 காவல்துறையினரும், 600 தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். வாழை, கரும்பு, தென்னை மட்டைகள், ஈச்சமர மட்டைகள் என பசுமை வளைவுகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 'விவசாயிகளின் நாயகன்', 'விவசாயிகளின் பாதுகாவலன்', 'விவசாயிகளின் விடிவெள்ளி' என பல்வேறு இடங்களிலும் வளைவுகளும், பிளக்ஸ் பேனர்களும் அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
முதல்வரை வரவேற்ற தப்பாட்ட குழுவினரும், நாதஸ்வர இசைக் குழுவினர்களும் தயார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், ஆட்சியர் அலுவலகம் வருகை தரும் அனைத்துத்துறை அலுவலர்களும் உடல் வெப்பமானி கொண்டு முழு சோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு தீயணைப்பு, மருத்துவம், மின்சாரம், துப்பறியும் காவல் பரிவு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
காலை 9.50 மணிக்கு அரியலூர் ஆட்சியர் அலுவலகம் வருகை தரும் முதல்வர், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய கட்டிடங்கள், திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கூட்டத்தில், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், ஆட்சியர் த.ரத்னா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.