தேமுதிக வடசென்னை மாவட்டச் செயலாளர் ப.மதிவாணன் திமுகவில் நேற்று இணைந்தார்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை தேமுதிக வடசென்னை மாவட்டச் செயலாளர் ப.மதிவாணன் திமுகவில் இணைந்தார். அவரை வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சிஉறுப்பினர் அட்டையை வழங்கினார்.
அப்போது சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தா.இளைய அருணா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
2 புதிய மாவட்ட செயலாளர்கள்
இந்நிலையில், தேமுதிக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக எம்.செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளராக எம்.வேல்முருகன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேமுதிகவின் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக எம்.செந்தில்குமார் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு ஆர்.கே.நகர், ராயபுரம் சட்டப்பேரவை தொகுதிகளை சேர்ந்த மாவட்ட, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு அளித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இதேபோல், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக எம்.வேல்முருகன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கொளத்தூர், திரு.வி.க.நகர், பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்பு அளித்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.