தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, தக்காளியின் கொள் முதல் விலை சரிவடைந்துள்ளது. இதனால், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, பாகலூர் பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலமாக 3 ஆயிரம் ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் தக்காளிப் பழங்கள், தினமும் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நடப்பாண்டில் இப்பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறும்போது, ‘‘தக்காளி மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை கொள்முதல் செய்கின்றனர். இப்பகுதியில் தக்காளி பயிரிட செலவு செய்த விவசாயிகள், வாங்கிய கடனைக் கூட திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ’’ என்றனர். இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரி கூறும்போது, ‘‘ஓசூர் மற்றும் அதைத் சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பாண்டில் பருவமழை நன்கு பெய்துள்ளதால் தக்காளி விளைச்சல் ஒரு ஏக்கருக்கு 10 டன் முதல் 20 டன் வரை அதிகரித்துள்ளது.
இவற்றுடன் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஓசூர் பத்தலப்பள்ளி சந்தைக்கு தக்காளி அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளது.
இதனால் மொத்த விற்பனையில் கடந்த வாரம் வரை ரூ.600 முதல் ரூ.900 வரை விற்பனையான 25 கிலோ உள்ள ஒரு தக்காளி பெட்டியின் விலை தற்போது ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது,’’ என்றார்.