தமிழகம்

விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களைத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களைத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரை கண்ணேனந்தல் பகுதியைச் சேர்ந்த பரசுராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''நான் 23 ஆண்டுகளாக மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற பலர் வெளிநாடுகளில் நடந்த பாரா ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளனர். மாற்றுத்திறன் விளையாட்டு வீரரான குருநாதன் என்பவர் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 26 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

இவர் தற்போது மதுரை ரேஸ்கோர்ஸில் தற்காலிகப் பயிற்சியாளராகப் பணிபுரிகிறார். அவருக்குப் பணி நிரந்தரம் மற்றும் இவரைப் போல் சாதனை படைத்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு நிரந்தர அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிட்டார்.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால், அவற்றைப் பெற அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ''புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவில்லை என்றாலும், உருவாகி வரும் விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகளை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால், அந்தப் பணியைத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்தி வருவதாகத் தெரியவில்லை.

விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதிலும் அரசியல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டுத் துறையைச் சார்ந்த, விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். மனு தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT