ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றின் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் சமூக நீதிக்கு எதிரான சதித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் இன்று (டிச.16) வெளியிட்ட அறிக்கை:
"ஐஐடி, ஐஐஎம் ஆகிய நிறுவனங்களின் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று அரசுக்கு வல்லுநர் குழு ஒன்று பரிந்துரை அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சமூக நீதியை ஒழித்துக்கட்டும் இந்தப் பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது. மத்திய அரசுக்குரிய கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாஜக அரசை வலியுறுத்துகிறோம்!
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களின்போது இட ஒதுக்கீடு இல்லாத நிலை நீண்டகாலமாக நிலவி வந்தது. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான் அதற்காக மத்திய அரசால் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் எஸ்.சி./ எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த சட்டத்தின் பிரிவு -3இல் கூறப்பட்டுள்ளது.
அந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகும் கூட நிலைமை மாற்றம் அடையவில்லை. இதை அரசின் கவனத்துக்கு நாடாளுமன்றக் குழு கொண்டு சென்றபோது கடந்த 2019 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆசிரியர் நியமனங்களில் முழுமையாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துச் சுற்றறிக்கை அனுப்பியது.
ஆனால், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக அந்தச் சட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்கு, இப்போது ஒரு குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமூக நீதியை அழித்தொழிக்கும் இந்தப் பரிந்துரை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
அதுமட்டுமன்றி, இந்தியாவிலுள்ள ஐடிஐ, ஐஐஎம்களில் எஸ்.சி./எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறப்பு நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.