புதுச்சேரி மின்துறையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு, ஆலோசகரை நியமித்துள்ளது. அவர் புதுச்சேரி வருவதற்குத் தேதி கேட்டு அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி மின்துறையைத் தனியார் மயமாக்க உள்ளதாக மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதனைத் தடுத்து நிறுத்த மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி அரசு மின்துறையைத் தனியார் மயமாக்குவதை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. இதனையடுத்து, மின்துறை ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாத இறுதியில் மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றுவதற்கான அறிக்கையைத் தயாரித்துச் சமர்ப்பிக்கும்படி புதுச்சேரி அரசுக்குக் கோப்பு அனுப்பியுள்ளது. அதன்படி அறிக்கை தயாரித்து வழங்க ஆளுநரும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுபற்றி அறிந்த மின்துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் இம்மாதத் தொடக்கத்தில் ஈடுபட்டனர். மின்தடை சரி செய்யப்படாததால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். மின் விநியோகம் சரி செய்யப்படாமல் இருந்ததால் மக்கள் மறியல் போராட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கினர்.
அதையடுத்து, முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தி, டெல்லிக்கு நிர்வாகிகளை அழைத்துச் செல்வதாகத் தெரிவித்ததால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மின்துறையைத் தனியார் மயமாக்குவது தொடர்பாக ஆலோசகரை மத்திய அரசு நியமித்துள்ளது.
இது தொடர்பாக, மின்துறை அமைச்சர் கமலக்கண்ணனிடம் கேட்டதற்கு, "மின்துறையைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். சமீபத்தில் மத்திய அரசு புதுவை மின்துறையைத் தனியார் மயமாக்க பூர்வாங்கச் செயல்பாடுகளை மேற்கொள்ள ஆலோசகரை நியமித்துள்ளது. மத்திய அரசின் ஆலோசகர் புதுவைக்கு வரும் தேதியைக் கேட்டு வருகிறார்.
மின்வாரிய ஊழியர்கள் தனியார் மயத்துக்கு எதிராகப் போராடினர். அவர்களை டெல்லி அழைத்துச் சென்று மத்திய அமைச்சரைச் சந்திக்க உள்ளோம். தேதியும் கேட்டுள்ளோம்.
தனியார் மயமாக்கல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பிறகு மின்துறை ஊழியர்கள் அலட்சியமாகச் செயல்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. பொதுமக்களின் புகார்களைக் கனிவோடு கேட்டுத் தீர்க்கும்படி வலியுறுத்தி வருகிறோம்.
அரசு நேரடியாக தனியார் மயத்தை எதிர்க்க முடியாது. அதே நேரத்தில், தொழிற்சங்கத்தினர் நீதிமன்றத்துக்குச் சென்றால் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.