வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தென்காசியில் இன்று நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், இந்தக் கோரிக்கைக்காக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் ஏர்க் கலப்பையுடன் வந்து கலந்துகொண்டனர். மேலும் திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் சிவபத்மநாதன், துரை, விவசாய அணி மாநிலச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனி, மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் டேனி அருள்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.