தமிழகம்

தி இந்து செய்தி எதிரொலி: குப்பைகளின் நடுவே வசித்து வந்த தருமபுரி முதியவர் மீட்பு

செய்திப்பிரிவு

தருமபுரி அருகேயுள்ள ராஜாபேட்டையில் குப்பைகள் தேங்கிய அறையில் நீண்ட நாட்களாக வசித்து வந்த முதியவர் 'தி இந்து' செய்தி எதிரொலியால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

தருமபுரி ராஜா பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆயில் இன்ஜின் மெக்கானிக் காளியப்பன் (81). மகன், மகள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். காளியப்பனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் ஏதோ காரணத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான காளியப்பன் வாரிசுகளுடன் தங்கியிருக்க விரும்பாமல் தான் ஆரம்ப காலத்தில் வசித்த ஓட்டு வீட்டிலேயே தங்கி விட்டார்.

இருபதுக்கு இருபது அளவு கொண்ட அந்த வீட்டின் முன்புறம் இடிந்து விழுந்து சிதிலமடைந்து கிடந்தது. அறையின் உட்புறம் காளியப்பன் தான் படுத்துறங்க மட்டும் சிறிதளவு இடத்தை ஒதுக்கி வைத்திருந்தார். குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பொட்டலங்களாக்கி வீட்டில் ஒரு குப்பைக் கிடங்கையே உருவாக்கி வைத்திருந்தார்.

அறக்கட்டளை சார்பில் அவரை மீட்க முயன்றபோது அவரது உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கடந்த 12-ம் தேதி 'தி இந்து'வில் செய்தி வெளியானது. இந்நிலையில் முதியவர் காளியப்பனை மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து இல்லத்தில் வைத்து பராமரிக்கும்படி மாவட்ட நிர்வாகத் துக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காவல்துறை உதவியுடன் காளியப் பன் மீட்கப்பட்டார். தருமபுரி அரசு மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று அவரை உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், ஆட்சியர் விவேகானந்தன் ஆகியோர் நேரில் பார்த்ததுடன் உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்திச் சென்றனர்.

காளியப்பன் நிலைகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர் கூறுகையில், “காளியப்பனுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பாதிப்பு கள் எதுவும் இல்லை. இடுப்புப் பகுதியில் மட்டும் எலும்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நடக்க சிரமப்படுகிறார். மேலும், நீண்ட ஆண்டுகள் தனிமையில் இருந்ததாலும், முதுமை காரணமாகவும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை மருத்துவ துறையில் 'கிராஸ்மால்நியூட்ரிஷியன் வித் டிப்ரஷன்' என்று அழைப்பார்கள். சிறப்பு நிபுணர் மூலம் ஓரிரு வாரம் சிகிச்சை அளித்தால் அவர் உடல் மற்றும் மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன்பிறகு அவர் இல்லம் ஒன்றுக்கு அனுப்பப்பட உள்ளார். காளியப்பனை விரைவாக குணமடையச் செய்ய அவரது குடும்பத்தாரையும் அழைத்து வந்து பேச வைக்க உள்ளோம்'' என்றார்.

SCROLL FOR NEXT