முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

திறந்தவெளியின் அளவுக்கேற்ப 50 சதவீத அளவுக்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் விதத்தில், சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை வரும் 19-ம் தேதி முதல் நடத்தலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 16) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, திறந்தவெளியின் அளவுக்கேற்ப தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவீத அளவுக்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 19.12.2020 முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், தனிமனித இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT