புதிய வேளாண் சட்டத்தின் நன்மைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறும் வகையில் தமிழகத்தில் 1,000 இடங்களில் கூட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.
தமிழக பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய வேளாண் சட்ட நன்மைகளை விளக்கிடும் வகையில் இன்று முதல் (டிச.16) 21-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 1,000 கூட்டங்கள் நடத்தப்படும். இதில், மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.
தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமர் உதவித்தொகை திட்டத்தில், ஓராண்டில் ரூ.6 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு, கரோனா ஊரடங்கு காலத்தில் ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் தலா ரூ.500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. 65 லட்சம் பெண்களுக்கு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும். பாஜக எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடும் என்பன உள்ளிட்ட விவரங்களை கட்சி மேலிடம் அறிவிக்கும். கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, 35 தொகுதிகளில் பாஜக 2-வது மற்றும் 3-வது இடங்களைக் கைப்பற்றியது. 90 இடங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய வாக்குகளைப் பெற்றது. தற்போது, தமிழகத்தில் பாஜக மேலும் வலிமை பெற்று இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.