தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்தியுள்ளது. பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரம் பெறாத அமமுக, மக்கள் நீதிமய்யம் (ம.நீ.ம.) உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் சின்னங்களை ஒதுக்கியது. அதன்படி அமமுகவுக்கு 'குக்கர்' சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் ம.நீ.ம. கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் 'பேட்டரி டார்ச்' சின்னம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் அந்தச் சின்னம் 'எம்ஜிஆர் மக்கள் கட்சி' என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 'பேட்டரி டார்ச்' சின்னத்தில் போட்டியிட்ட ம.நீ.ம. கட்சிக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 'எம்ஜிஆர் மக்கள் கட்சி'யின் தலைவர் விஸ்வநாதன் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: 'அனைத்துலக எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை பல ஆண்டுகளாக நடத்தி வந்தேன். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பத்தூர், ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டேன். அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்த பிறகு கடந்த 5-10-2018-ல் 'எம்ஜிஆர் மக்கள் கட்சி'யை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தேன்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது பேட்டரி டார்ச், டை, சாக்லேட் ஆகிய சின்னங்களை நான் கேட்டிருந்தேன். அதில் நான் முதலில் கேட்ட 'பேட்டரி டார்ச்' சின்னத்தைதேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கட்சி பதிவு அடிப்படையில் ம.நீ.ம. கட்சியை விட எம்ஜிஆர் மக்கள் கட்சி சீனியர் கட்சி. எனவே, முன்னுரிமை அடிப்படையில் 'பேட்டரி டார்ச்' சின்னம் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
ம.நீ.ம. கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் என்னை தொடர்பு கொண்டு 'பேட்டரி டார்ச்' சின்னத்தை விட்டுக் கொடுக்குமாறு கேட்டனர். நான் விரும்பி கேட்ட சின்னம் என்பதால் மறுத்து விட்டேன். கமல்ஹாசனே நேரில் வந்து கேட்டாலும் 'பேட்டரி டார்ச்' சின்னத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன். கமல்ஹாசன் நீதிமன்றத்தை நாடினால் அதனை தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் என்றார்.