பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் திருப்போரூரில் சேதமடைந்துள்ள ஓஎம்ஆர் சாலையில் புழுதி பறக்க அதில் செல்லும் வாகனங்கள். 
தமிழகம்

பாதாள சாக்கடை பணியால் ஓஎம்ஆர் சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு

செய்திப்பிரிவு

திருப்போரூரில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் சேதமடைந்துள்ள ஓஎம்ஆர் சாலையில் புழுதி பறந்து, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டப் பணி கடந்த 2018-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஓஎம்ஆர் சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் புயல், கனமழையால் ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் தேங்கி சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், இள்ளலூர் இணைப்புச் சாலை பகுதியில் இருந்து, பேருந்து நிலையம் வரையில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

சாலை பள்ளங்களில், ஜல்லி கற்கள் மற்றும் எம்-சாண்ட் கலந்த ரெடிமிக்ஸ் கலவை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. தற்போது மழை நின்றுள்ள நிலையில், வாகனங்கள் செல்லும் போது இப்பகுதியில் அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட பகுதியை கடந்து செல்வதற்குள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதால், சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, "பாதாள சாக்கடை பணிகளுக்கு பள்ளம் தோண்டுவதற்கு வெடிமருந்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறையினரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம்.

அனுமதி கிடைத்ததும் பணிகள் துரிதப்படுத்தப்படும். மேலும், வாகன போக்குவரத்துக்காக தற்காலிக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்ததால் மட்டுமே புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியும்" என்றனர்.

SCROLL FOR NEXT