வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சண்முகம் பங்கேற்றார்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு, நிர்வாகி லாரன்ஸ், முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாயிகள் சங்கம் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 43 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.அருள், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட தலைவர் ஜி.சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டசெயலாளர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்று, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவேண் டும் என வலியுறுத்தி பேசினர்.
அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற 120 பேரை திருவள்ளூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்.