எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என்று இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் புதுச்சேரி விருது விழாவில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா 2020, இன்று இரவு அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் தொடங்கியது.
இதில் கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' தேர்வு செய்யப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் தரப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட இயக்குநர், நடிகர் பார்த்திபன் பேசியதாவது:
''ரொம்ப கூல் ஆக இருந்தால் ஜெயிக்க முடியாது. கஷ்டப்பட்டுதான் ஜெயித்தேன். நடிக்க ஆசைப்பட்டுதான் திரைத்துறைக்கு வந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. அதையடுத்து வீட்டுக்குச் சென்றுவிடாமல், இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளரானேன். அஜித், விஜய் படங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த அக்காலத்தில் இதுபோல் படம் எடுக்கலாமா எனத் தோன்றியதற்குக் காரணமே எனது தோல்விகள்தான்.
நிறைய இளைஞர்கள் தோல்வியில் துவண்டு, தற்கொலை முடிவை எடுக்கின்றனர். அதுவும் திரைப்பட மற்றும் சீரியல் நடிகைகள் பாதிப்புக்கு உள்ளாகி, இம்முடிவை எடுக்கின்றனர். காதல் ஒன்றுமில்லை என்பது புரிய கொஞ்சம் வயதாகும். அதைக் காதலித்தோர் மட்டுமே சொல்ல முடியும். துவளாமல் முயற்சி செய்யுங்கள். ரசிகர்களின் ரசனையே இவ்வளவு தொலைவு என்னைக் கொண்டுவந்துள்ளது.
உண்மையில் எனக்குத் தன்னம்பிக்கையை வளர்த்தது எனது தந்தைதான். தொடக்கத்தில் என்மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், நான் திரைத்துறையில் வெல்வேன் என்று என் அப்பா நம்பினார். என் அப்பா போஸ்ட்மேன். 'தாவணிக் கனவுகள்' படத்தில் போஸ்ட்மேனாக நடித்தேன். அவர் கேன்சர் வந்து கஷ்டப்பட்டார். நான் முன்னுக்கு வருவேனா என்ற குழப்பம் இருந்தது. நிறைய அப்பாக்களின் கனவு, தன் குழந்தையை உயரத்தில் பார்க்க ஆசைப்படுவதுதான். உண்மையில் என் பூஜை அறையில் உள்ள ஒரே சாமி படம் என் அப்பாவின் புகைப்படம்தான்.
சினிமாவை விட்டு அரசியலுக்குச் சென்றாலும் கலையின் மேல் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோருக்கு ஈடுபாடு உண்டு. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தோர் நிறையப் பேர் உண்டு. இவர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்களோ எனச் சிலர் பயப்படவும் வைக்கிறார்கள். புதிய கட்சியை நான்கூடத் தொடங்கலாமா என்று யோசிக்கிறேன். எனது கட்சிக்குப் பெயர் புதிய பாதை.
புதுச்சேரியில் ஷூட்டிங் கட்டணம் மிகக் குறைவாக இருந்தது. இப்போது அது அதிகமாகிவிட்டது. அதைக் குறைக்க வேண்டும். அதன் மூலம் நிறையப் படப்பிடிப்பு நடக்கும். அடுத்து 'இரவின் நிழல்' திரைப்படத்தை ஒரே ஷாட்டில் இயக்குகிறேன். ஆஸ்கரைக் குறிவைத்துதான் இயக்குகிறேன்.''
இவ்வாறு பார்த்திபன் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து திரைத் துறையினரின் அரசியல் பிரவேசம் தொடர்பாகக் கேட்டதற்கு, "ஏற்கெனவே நிறையக் குழப்பம். நான் வேறு சொல்லிக் குழப்ப வேண்டுமா? யாருக்கு வாக்களிப்பது என்று மக்களும் குழப்பமாக இருக்கிறார்கள். திரைத்துறையினர் அரசியலுக்கு வந்து சிறப்பான ஆட்சி தந்துள்ளனர். அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.
நடிகர்கள் என்பதால் ஒதுக்க வேண்டியதில்லை. எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். நான் மட்டுமல்ல நிறைய இளைஞர்களுக்கும் அரசியலுக்கு வரவேண்டும்" என்று குறிப்பிட்டார்.
அதையடுத்து அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் 'ஒத்த செருப்பு' திரைப்படம் திரையிடப்பட்டது.